எனது எதிர்பார்ப்பும் நிறைவேறலும்…..
நான் பாலசுப்பிரமணியம் திருக்குமார், இலங்கை வங்கியில் உத்தியோகத்தராகக் கடமை புரிகின்றேன். உங்களைப் போல் ஒரு மாணவனாக இணைய வழி மூலமான வியாபார முகாமைத்துவமாணி கற்கைநெறி தொடர்பான எனது அனுபவங்களினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உள்வாரியான மாணவனாக 2008ம் ஆண்டு வணிகமாணிக் கற்கை நெறியினைத் தொடர்ந்திருந்தேன். எனது முதலாவது வருடத்தினை நிறைவு செய்த வேளையில் எனக்குக் கிடைத்த வேலை வாய்ப்பினால் உள்வாரியான கற்கை நெறியினைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. இலங்கை வங்கியில் இணைந்ததன் பின்னரும் எனது இளமாணிப் பட்டப்படிப்பினை எவ்வாறு பூர்த்தி செய்வது எனும் எண்ண ஓட்டம் தொடர்ந்து இருந்தது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தினால் நடாத்தப்படும் இணையவழி மூலமான வியாபார முகாமைத்துவமாணி கற்கை நெறியினை முதலாம் வருட விலக்களிப்புடன் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பினை முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீட பீடாதிபதியும், வியாபார முகாமைத்துவமாணி கற்கைநெறி இணைப்பாளரும் பல்கலைக்கழக மூதவையின் அனுமதியுடன் பெற்றுத் தந்திருந்தார்கள். இத்தகைய முதலாவது அனுபவமே இக் கற்கையானது முற்றுமுழுதுமாக மாணவர் நலன் நோக்கியதானதாகவே வடிவமைக்கப்பட்டமையினை உணர்த்தியது.
இதன்படி டீடீஆ நான்காவது அணியுடன் இணைந்தேன். உண்மையிலேயே தொழில் புரிவோருக்கும், பல்கலைக்கழக அனுமதியினைப் பெற சந்தர்ப்பம் கிடைக்கப் பெறாதோருக்கும் வாய்த்த மிகவும் பெறுமதிவாய்ந்த ஒரு பட்டப்படிப்புக் கற்கை நெறியாகவே இதனை நான் கண்ணுற்றேன். நியாயமான கட்டணத்துடன் உயர்தரம் வாய்ந்த பட்டப்படிப்பாகக் காணப்படுவதோடு க.பொ.த உயர்தரத்தில் எந்தப் பிரிவில் கல்வி கற்றிருந்தாலும் இக் கற்கை நெறியினை தொடரக் கூடியதாகக் காணப்படுவது இதனது சிறப்பம்சமாகும்.
மேலும் எனது தாய் மொழியில் கற்பது மிகவும் இலகுவானதாகவும் இணைய வழிமுறையில் கல்வி கற்பது ஒரு புதிய அனுபவமாகவும் இருந்தது. இணைய வழி முறையின் ஆரம்பத்தில் சில சிரமங்கள் காணப்பட்டாலும் அவற்றினை நாமே நிவர்த்தி செய்யக் கூடியவாறு அமைந்தது இக் கற்கைநெறியின் இணையவழி முறைமையினை வடிவமைத்தமைக்குக் கிடைத்த வெற்றியாகும்.
விரிவுரைகள் வார ரீதியாக பதிவேற்றம் செய்யப்படுவதனால் எனக்கு பொருத்தமான நேரத்தில் கல்வி கற்கக் கூடிய வாய்ப்பும் பாடரீதியான கணிப்பீடுகளினை உரிய நேர ஆயிடைக்குள் சமர்ப்பிக்கும் போது கணிசமான அளவு புள்ளிகளினைப் பெறக் கூடியவாறும் அமைந்தது. இக் கணிப்பீட்டுப் புள்ளிகள் இறுதிப் புள்ளிகளிற்குள் உள்ளடக்கப்படுவதனால் இலகுவான முறையில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்ய முடிந்தது.
திறமையான விரிவுரையாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க கற்பித்தல் முறைகளும் மிகவும் விளக்கமான பாட உள்ளடக்கங்களும் எனது அறிவினை மேம்படுத்தியது. எனது அன்றாட வாழ்வின் ஓரங்கமாகவே இவ் விரிவுரைகளும் பொருந்தியிருந்தன ஏனெனில் நெகிழ்வுத்தன்மை கொண்ட விரிவுரை நேரங்களினால் பொருத்தமான நேரங்களில் கற்கக் கூடிய வாய்ப்புக் கிட்டியது.
இடையிடையே நடாத்தப்படும் நேரடிச் சந்திப்புக்கள் மிகுந்த பயனுள்ளதாக இருந்தன. ஏனெனில் பதிவேற்றப்படும் பாட விடயங்களில் ஏற்படும் சந்தேகங்களினை வினைத்திறனான முறையில் தெளிவுபடுத்திக் கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பாக இந் நேரடிச் சந்திப்புக்கள் இருந்தன. இக் கற்கை நெறியினை தெரிவு செய்துள்ளோருக்கும், கற்கையினை மேற்கொள்பவர்களுக்கும் எனது அனுபவத்திலிருந்து கூறுவது இக் கலந்துரையாடல்கள் மிகவும் முக்கியமானதும் பயனுடையதாகவும் உள்ளமையினால் இவற்றினை தவறவிடாது பங்குபற்றுவது மிகுந்த பயனளிக்கக் கூடியதாகும்.
பல புதிய பாட விரிவுரைகளினையும் ஏற்கனவே அறிந்த பாடங்களில் மிக மேம்பட்ட விடயங்களினை அறிந்து கொள்ளக் கூடியவாறு இருந்ததோடு இவற்றின் மூலம் பெற்றுக் கொண்ட அறிவு, திறன், மனப்பாங்கு ஆகியவை எனது பணியிடத்திலும் வாழ்க்கையிலும் பல சந்தர்ப்பங்களில் எனது முடிவெடுக்கும் ஆற்றலினையும் சிந்தனை முறைமையினையும் மேம்படுத்த உறுதுணையாயிருக்கின்றன. சீரிய முயற்சியுடன், கல்வி கற்கும் நேரத்தினைத் திட்டமிட்டு, குழுமுறையில் கல்வி கற்கும் போது பாடவிதானங்களினை உள்வாங்கும் அளவு அதிகரித்ததனை உணரக் கூடியதாக இருந்தது.
எனது வங்கியியல் வாழ்க்கையில் பயிற்சி ஆளணி உதவியாளராக இணைந்து கொண்டதிலிருந்து அடுத்தடுத்து பெற்றுக்கொண்ட பதவியுயர்வுகளிற்கு இவ் இளமாணிப் பட்டம் மிகவும் இன்றியமையாததாக இருந்தது. மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வியாபார முதுமாணி கற்கையினை தொடர்வதற்கு இணைய வழி மூலமான வியாபார முகாமைத்துவமாணி கற்கை நெறியே உறுதுணை புரிந்தது என்றால் அது மிகையாகாது. என்னைப் போன்ற பல்லாயிரக் கணக்கான மாணவர்களின் பல்கலைக்கழகக் கனவினை நனவாக்கிய இணையவழி மூலமான வியாபார முகாமைத்துவமாணி கற்கைநெறியினால் நான் மிகுந்த பயனடைந்தேன் என்பதனைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்வடைகின்றேன்.
உங்களில் ஒருவன்
பா.திருக்குமார்